வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு.

வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு.

வவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கற்பிணித்தாயார் ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய ஊழியர் ஒருவர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் தமது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தெரிந்துகொண்ட இருவரும் கடந்த நவம்பர் மாதம் புசல்லாவ பகுதிக்குச் சென்று பதிவுத் திருமணம் மேற்கொண்டு சில காலம் தங்கியிருந்துவிட்டு வவுனியாவிற்கு திரும்பி வந்துள்ளனர்.

வவுனியா வியாபார நிலையத்தின் உரிமையாளர் தனது மகளை தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் கடத்திச் சென்றுவிட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

புசல்லாவ பதியில் தங்கியிருந்த இருவரும் பதிவுத்திருமணத்தனை மேற்கொண்டுள்ளதுடன் அங்குள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக தாம் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் இருவரும் எவருடைய வற்புறுத்தலின்றி இணைந்து வசித்து வருவதாகவும் முற்கூட்டியே தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் புசல்லாவ பகுதி பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வவுனியா பொலிசார் வவுனியா வர்த்தக நிலையத்தின் உரிமையாளருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்து வியாபார நிலையத்தின் உரிமையாளரின் மகளைத்திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கு நீதிமன்றப் பிடிவிறாந்து பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் எவ்வித தகவல்களையும் இளைஞனின் தரப்பினருக்கு வழங்கவில்லை பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதையடுத்து குறித்த இளைஞனை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக வருமாறு தெரிவித்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது கணவர் மீது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரால் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தி 14நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனவே வவுனியா பொலிசார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் பக்கச்சார்புடன் நடந்துகொண்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது நான்கு மாத கற்பிணித்தாயாராகவுள்ளதை கவனத்திற்கொண்டு தனது கணவரின் விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து வவுனியா இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்தின் சட்டத்தரணியான ஆர். எல். வசந்தராஜாவுடன் தொடர்புகொண்டு வினவியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அலுவலகத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவங்களில் யார் எல்லாம் தொடர்புபட்டுள்ளார்கள் போன்ற விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அழைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net