ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள்.

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள்.

இந்த தலைப்பை போடுகின்றபோது எனக்கு அந்த வியட்நாம் சிறுமி நினைவில் தோன்றுகின்றாள். உலகத்தை உலக்கிய அந்த காட்சி இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் முட்களால் இந்த உலகத்தை தைத்துக்கொண்டிருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு நிறைந்த ஜெனிவா நகரின் தெருவில் குளிராடைகளை அணிந்தபடி ஈழத்துச்சிறுமி ஒருத்தி தன் தாயின் கைபற்றியபடி நடந்து வருகின்றாள்.அந்தத்தெருவில் எங்கள் தெருக்களைப்போல தலையசைத்தும் புன்னகைத்தும் செல்ல எவரும் இல்லைத்தான்.

அரிதாக விடுமுறை நாட்களில் புலம்பெயரிகளை காணும்போதுதான் மனம் விட்டு பேசக்கூடிய மண்வாசனையிருக்கும்.

இதுவே வாழ்க்கையின் இன்னொரு பண்பாடாக நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது.ஜெனிவாவின் தெருவை சுவிஸ் கன்ரோனின் தெரு என்று சொல்வதை விட அது உலகத்தின் பிரதான தெரு என்று சொல்லிக்கொள்ளலாம்.கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகம் எங்களுரில் உச்சரிக்கபடாத ஒரு வார்த்தையாக ஜெனிவா இருந்திருக்கிறது.

அது சிலர் மட்டும் அறிந்திருந்த வார்த்தையாக இருந்தது.அது ஈழத்தின் இருக்கின்ற தமிழர்களின் நாடி நரம்புகளில்லாம் கலந்திருக்கப்போகின்ற ஒரு சொல்லாக ஒருபோதும் எண்ணியதில்லை.

ஜெனிவா என்பது எமக்கு எவ்வாறு தேவையாய் இருந்திருக்கும் ஊகித்துக்கொள்ளவில்லை.ஆனால் ஜெனிவா எமக்கு இன்றுதேவையான பெருவார்த்தையாயிற்று.

பயணித்துக்கொண்டிருந்தபோது தவறவிடப்பட்ட பொருளை தேடுகின்றவர்கள் போல அந்த தெருவில் தேடுகின்றவர்களில் ஒருவராக நாமும் இசுலாமியர்கள் மக்காவிற்கு சென்று ஒன்று கூடுவதுபோல 2009ற்கு பிறகு ஜெனிவா யாத்திரிகர்களாக ஈழத்து மனிதர்கள் மாற்றப்பட்டுவிடார்கள்.அந்த தெருவில் அந்த சிறுமியின் கண்களும் அவளின் தாயின் கண்களும் ஓரிடத்தில் குத்திட்டு நிற்கின்றன.

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள்

அந்த சிறுமிக்கும் தாய்க்கும் மனதில் நிறைந்துபோன அந்த குருதி வழியும் முகங்கள்.குண்டுபட்டு பிணங்களான பழக்கபட்;டவர்களின் உடலங்கள்.இந்த உலகத்தால் கைவிடப்பட்ட நாட்களில் கொலைக்களத்தில் மரணவலியில் ஓங்கிக்குரலெடுத்து அழும் ஏதிலிகளின் கண்ணீர்.

வியட்நாமியை சிறுமியை விடவும் அவலம் நிறைந்த போரில் சிதையுண்ட குழந்தைகளின் சடலங்கள்.பற்றி எரியும் அகதிக்கூடாரங்கள்.பாதுகாப்பு அகழிகளில் நிறைந்து கிடக்கும் தாயும் பிள்ளைகளின் பிணங்கள்எங்கும் எதிலும் சதைத்துண்டங்களும் சடலங்களும் காயங்களும் அழுகைகளும் அவலங்களுமாக சிதைந்த ஒரு நிலத்தின் காட்சிகள் புகைப்படங்களாக மீண்டும் அந்த ஜெனிவாவின் தெருவில்.

மனித உரிமைக் கூட்டத்தொடர் நடக்கின்ற பருவப்பொழுதுகளில் எல்லாம்.அந்த ஈழத்து பேரவலப்புகைப்படங்களை ஜெனிவா முன்றலில் காட்சிப்படுத்தும் அந்த புலம்பெயரி அவர் பெயர் கஜன் என நினைக்கின்றேன் அவர் கூட நினைத்திருக்க மாட்டார் தான் வைத்திருக்கும் புகைப்படங்களில் ஒன்று இந்த உலகத்துக்கு ஈழத்துக்கதைகளில் இன்னொரு உணர்ச்சி மிக்க அவலக்கதையை சொல்லப்போவதை.

ஆனால் அது அந்தக்கணம் அந்த ஜெனிவாத்தெருவில் நிகழ்ந்தது.அந்த ஈழத்து சிறுமியும் தாயும் புகைப்படங்கள் வைத்திருந்து கொட்டகைக்குள் நுழைகின்றார்கள்.ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டு வருகின்றார்கள்.

அந்த எட்டு வயதாகின்ற சிறுமியும் தாயும் கூட நினைத்திருக்கமாட்டார்கள் தங்கள் கதையின் காலப்பயணம் பற்றி.அந்தப்பயணத்தின் உணர்ச்சிமிக்க தருணத்தை அக்கணத்தில் சந்தித்தனர்.

ஒரு புகைப்படத்தின் முன் அந்த ஈழத்துச்சிறுமியும் தாயும் உறைந்துவிட்டனர்.சுவிஸ் தேசத்தில் கொட்டும் பனிமழையைவிட அந்தப்புகைப்படம் அவர்களை உறையவைத்திருந்தது.

அந்தப்புகைப்படத்தில் மிகவும் கொடுரமான மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருந்த ஈழநிலத்தில் மரணத்தின் ஆழத்தை தம்மை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பது பற்றிய ஒற்றைப்பக்கத்தை கூட உணரமுடியாத ஒரு குழந்தை எறிகணைகள் பட்டு கொல்லப்பட்டுக்கிடந்த தன் தந்தையின் புன்னகை பறிக்கப்பட்ட முகத்தில் இறுதிமுத்தம் கொடுக்கும் காட்சி அங்கே புகைப்படமாக காட்சி தந்து கொண்டிருந்தது.

உறைந்திருந்த கணம் விலக்கி தன் தந்தைக்கு இரண்டாவது முத்தத்தை ஜெனிவாத் தெருவில் அந்தச் சிறுமி கொடுக்கிறாள்.

தாயின் கண்களில் தேவிபுரத்தில் தேங்கிய கண்ணீரில் மறுபாதி ஜெனிவாத் தெருவில் தேவிபுரத்தில் கொல்லப்பட்ட தன் கணவர் சத்தியமூர்த்திக்கு தன் இரண்டரை வயது குழந்தை முத்தமிடும் அந்த புகைப்படத்தின் முன் பொலுபொலுவென உதிர்கின்றது.

நன்றி முகநூல்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net