4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(15) ஆரம்பித்து வைத்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக 4474 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்லானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்த நிதி 4474 மில்லியன் இதில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் காணப்படுகிறது.

கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியற்றினூடாக கடந்த காலங்களில் பல்வேறு கட்டமாக மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனங்களை அடுத்தே கிளிநொச்சி மாவட்டவைத்திய சாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் சாத்தியமாகியுள்ளது.

அடிக்கல் நாட்டும் வைபவத்தினைத் தொடர்ந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கென 50 மில்லியன் பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் வைபவரீதியாகப் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் வைத்தியசாலையிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் கட்டுமாணப் பணிகள் 2003ம் வருடம் 600 கட்டில்களுடன் கூடிய அதிநவீன மருத்துவமனைக்கான திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் 2006ஆம் வருடம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததுடன் அக்கட்டுமாணப் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டிருந்தன.

சேவையின் தேவை கருதி அவ்வாறு இடைநடுவில் நின்றுபோன வைத்தியசாலையின் கட்டட வளங்களுடன் கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையானது 2006ம் ஆண்டிலிருந்து இயங்கியிருந்தது.

2008 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெயரும் வரை 200 கட்டில்களுடன் இயங்கிய இந்த வைத்தியசாலை 2009ம் ஆண்டு மீள் குடியேற்றத்துடன் 10 கட்டில்களுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

2010ம் ஆண்டிலிருந்து மீண்டும் 200 கட்டில் வசதிகளுடன் இவ்வைத்தியசாலை தனது சேவையினைத் தொடர்ந்தாலும் இடை நடுவில் நின்றுபோன கட்டுமாணப் பணிகளை மீளவும் முன்னெடுப்பதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் விளைவாக 2016ம் ஆண்டின் இறுதியில் மாவட்ட, மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி பொறியியல் பீடாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் அனைவரும் இணைந்து 4474 மில்லியன் உத்தேச மதிப்பீட்டில் சகல வசதிகளுடனும் கூடிய கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையுடன் இணைந்த மகப்பேற்றியல் விசேட வைத்திய மையத்தினை உள்ளடக்கிய கட்டம் இரண்டிற்கான முன்மொழிவினை உருவாக்கியிருந்தனர்

ஐந்து பகுதிகளாக கொண்ட, 36 மாதங்களில் கட்டி முடிப்பதற்குத் திட்டமிடப்பட்ட மேற்படி அபிவிருத்தித் திட்டத்திற்கு 2017ம் வருடம் வைகாசி மாதம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதனை தொடர்ந்து இன்றைய தினம் பிரதமரினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, அமைச்சர்களான வஜிர அபேயகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம்.

ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net