யாழில் ஐ.நா அதிகாரிக்கு அச்சுறுத்தல் – மைத்திரியிடம் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
இதில் “இராணுவத்தினர் எனக் கூறிக் கொண்ட இருவர், யாழ். மாவட்டத்தில் உள்ள ஐ.நா. அதிகாரி ஒருவரின் வதிவிடத்துக்குள் நுழைந்தனர்.
ஒருவர் கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். குறித்த ஐ.நா அதிகாரி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்ததுடன், அந்த அதிகாரியை அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்” என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
இருப்பினும் இந்த முறைப்பாடு தொடர்பாக வடக்கில் உள்ள இராணுவத்தினர் தெரிவிக்கையில், தமது படையினர் எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.