கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம்.

கிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்தில் பரந்த நிலப்பரப்பில் பல கிராமங்களை உள்ளடக்கி பெருமளவான மக்கள் வசித்துவருகின்றார்கள்.

கிளிநொச்சியின் மேற்குப் பக்கமாக அமைந்து காணப்படும் இப்பகுதி தற்போது கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படுகின்றது. இப்பகுதிக்கான தனியான ஒரு பிரதேச செயலாளர் பிரிவினை அமைக்குமாறு இப்பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கடுமையான முயற்சியின் பயனாக கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு புதிதாக அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு அனைத்துச் செயற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

மேற்படி தகவலை வன்னேரிக்குளம் பகுதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

அக்கராயன் பிரதேசத்தின் கீழ் அடங்கும் வன்னேரிக்குளம் பகுதி மக்களுடனான பிரதேச உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நவன்னேரிக்குளம் முருகன் கோயில் முன்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் மேலும் கூறுகையில், கிளிநொச்சியின் மேற்குப் பக்கமாக அமைந்து காணப்படும் வன்னேரிக்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில் போன்ற பல பெரிய கிராமங்களில் பெருமளவான மக்கள் வசித்து வருகின்றார்கள்.

இப்பகுதிகளில் மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளன. பெரும்பாலும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பகுதியின் பிரதான வீதிகளுக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிளிநொச்சியின் மேற்குப் பக்கமாகவுள்ள அக்கராயன் பிரதேசத்தின் கீழ், வரும் கிராமங்களை உள்ளடக்கி இப்பகுதிக்கான தனியான பிரதேச செயலாளர் பிரிவொன்றினை உருவாக்க வேண்டும் என்பதில் நாம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

அது மட்டுமல்ல கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காணப்படும் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளைப் புதிதாக உருவாக்கி மக்கள் இலகுவான முறையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் கிராமங்களின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை இலகுவான முறையில் முன்னெடுப்பதற்குமான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

அக்கராயன் அம்பலப் பெருமாள் சந்தியிலிருந்து முழங்காவில் செல்லும் பிரதான வீதி மிகமோசமான நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியை, பயணத்திற்கு இடைஞ்சலில்லாத வகையில் இரு வாரத்திற்குள் கரைச்சிப் பிரதேச சபை மூலமாக தற்காலிகமாக புனரமைப்புச் செய்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான முயற்சிகளில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பின் ஊடாக ஐ-வீதி திட்டத்தின் கீழ் இவ்வீதியை ஜெயபுரம் வரை மூன்று கட்டங்களாக முழுமையான காப்பெட் வீதியாக மாற்றியமைப்பதற்குரிய புனரமைப்பு வேலைகள் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான முழு முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

எமது பகுதி மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

கடந்த காலங்களில் புனரமைப்பு என்ற பெயரில் வீதிகளுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு தரமற்ற முறையில் புனரமைப்புச் செய்யப்பட்டது போன்ற மோசடிகள் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் விழிப்பாகவுள்ளோம்.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இங்கிருந்து காட்டாட்சி நடத்திய அவரது அடிவருடிகளால் புனரமைப்புச் செய்யப்பட்ட முட்கொம்பன் வீதி கொங்கிறீற் வீதியாகப் புனரமைப்புச் செய்யப்பட்ட போதிலும் தரமற்ற முறையில் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மோசடிகள் இடம்பெற்றுள்ளதை அவ்வீதியால் போக்குவரத்துச் செய்பவர்களுக்கு நன்கு தெரியும்.

அவ்வாறில்லாமல் எமது பகுதிக்கான அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் எமது மக்களது கண்காணிப்புடனேயே நடைபெற வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தி நீடித்து நிலைக்கக் கூடிய தரமானதாக அமைய வேண்டும் என்றார்.

மேற்படி மக்களுடனான கலந்துரையாடலில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர் நா.செல்வநாயகம் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைச் சேர்ந்த பொறியியலாளர் துஸ்யந்தன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ரங்கன், சமுர்த்தி உத்தியோகத்தர் புஸ்பன், கிராம அலுவலர்களான சபாரத்தினம், சயந்தன், அப்பகுதி அமைப்பாளர் ஆரூரன் மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 9616 Mukadu · All rights reserved · designed by Speed IT net