ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம்

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு யாழ். மாநகர முதல்வர் கண்டனம்



ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருப்பது ஊடக சுதந்திரம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்ட வேளை சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட ஊடகவியலாளர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

பொலிஸாரின் இச் செயற்பாடு தொடர்பில் மாநகர முதல்வர் என்ற வகையிலும், மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் எனது கண்டனத்தை வெளியிடுவதோடு இச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உரிய தரப்பினரை வலியுறுத்துகின்றேன்.

மேலும் ஊடகச் சேவையை செய்து வருகின்ற இவ்வாறான பல ஊடகவியலாளர்களின் மீதும், ஊடகங்களின் மீதும் ஊடக சுதந்திரத்தை மதிக்காது அச்சுறுத்துவதும், தாக்குதல் நடாத்துவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இதனை தொடரவிடாது தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net