சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்!

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் யுத்த காலத்தை விடவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.

போதைவஸ்து பாவனை, சட்டவிரோத மண் அகழ்வு, மரக் கடத்தல் என்று சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. அதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் மணல் அகழப்படும் செயற்பாடு முதன்மை வகிக்கின்றது.

தமிழர்களின் மூன்று தசாப்த போராட்டம் என்பது தாயகப்பகுதியில் மண் வளத்தைப் பாதுகாப்பதற்கு என தமிழீழ விடுதலைப் புலிகள் தனியான ஒரு பிரிவை நிறுவியிருந்தார்கள்.

இன்றைய கால கட்டத்தில் அவர்களினால் பாதுகாக்கப்பட்ட இடங்கள் கூட துவம்சம் செய்யப்படுகிறது.

நாட்டின் அதிபர் மூச்சுக்கு முப்பது தடவைகள் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என கூக்குரல் எழுப்பினாலும், குறிப்பாக தமிழர் தாயகப்பகுதியிலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதுதான் உண்மை.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை பகுதி மற்றும் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுகின்றது.

வாகனேரி பகுதியில் தவணைக் கண்டம், பள்ளக்கட்டு, தரசேனை கண்டம், மக்குளான கண்டம், பள்ளிமடு கண்டம், அடம்படி வட்டவான், பருத்திச்சேனை கண்டம், பொண்டுகள்சேனை, முருத்தானை, அக்குறானை, மினுமினுத்தவெளி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் வயல் காணியில் உள்ள மணல் சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது.

நீர்ப்பாசன வாய்க்கால் மண்ணை பதினைந்து அடி ஆழம் வரை தோண்டி எடுக்கின்றனர்.

வாய்க்காலில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக இருபத்தைந்து ‘லோட்’ மணல் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் காடுகளும் அழிக்கப்படுவதுடன், மரங்களை வெட்டி வாய்க்காலில் போடுவதால் நீரின் ஓட்டமும் குறைவடைந்து செல்கின்றது.

இதன் காரணமாக 1945ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட பல்லக்கட்டு பள்ளிமடு கண்டத்தின் வான்கதவின் கீழ்ப் பக்கம் சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

நீரின் வேகம் அதிகரித்துச் செல்லும் போது, மணல் அடித்துச் செல்லப்படும் போது வான்கதவு சரிந்து விழுந்து வயல் நிலங்களை அழித்து விடும் ஆபத்து உள்ளது.

மணல் அகழப்படுவதால், வாய்க்காலின் ஆழம் அதிகரித்து மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன், நிலம் மற்றும் அணைக்கட்டுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமையும் ஏற்படுகின்றது.

மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்கள் வயல் நிலங்களை ஊடறுத்துச் செல்வதால் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு வந்தால் மறுநாள் அதிகமான வாகனங்கள் மணல் அகழ்வில் ஈடுபடுகிறது. இரவோடு இரவாக மணல் அகழ்வதாக உரிய அதிகாரிகளுக்கு பல தடவை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காவின் அதிபர் மைத்ரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்தார். நாம் வாழும் இந்த பூமியையும் இயற்கை மற்றும் சீவராசிகளையும் நேசித்து அவற்றை வளப்படுத்திப் பாதுகாக்கின்ற முக்கிய பொறுப்பு புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப்பணியகத்திற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் உரியதாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் முத்துராஜவெல பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றாடல் அழிவுகள் குறித்து குறிப்பிட்ட அதிபர் வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெறும் சுற்றாடல் அழிவுகள் தொடர்பாக மெளனமாக இருப்பது ஏன்?

சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரச நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது பற்றி தேடிப்பார்ப்பது முக்கியமான பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புவிச்சரிதவியல் துறை அதிகாரிகள் மண்மாபியாட்களிடம் விலைபோயுள்ளதை நாட்டின் அதிபர் அறிவாரா?

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெருகல் கங்கை அருகில் மணல் ஏற்றுவதற்கான அனுமதியை இத்துறை அதிகாரிகளே வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்தில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் சிங்களவர்களுக்குச் சார்பாக வாகரை காவல்துறையினர் நடந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தளாய்ப் பகுதியிலிருந்து வந்து வெருகல் ஆற்றில் மணல் அகழப்படுகிறது. பிரதேச செயலாளரின் அனுமதியின்றி கிறவலோ அல்லது மணலோ அகழ்வதற்கு புவிசரிதவியில் கனிய வளங்கள் சுரங்கங்கள் பணியகம் அனுமதி வழங்கக் கூடாது.

பிரதேச செயலாளரின் அனுமதியின்றி சிங்கள இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கில் செலவு செய்து செப்பனிடப்பட்ட வீதிகள் இதனால் பாதிப்படைந்துள்ளன.

பிரதேச செயலக எல்லைக்குள் நடைபெறும் விடயங்கள் அனைத்தும் பிரதேசசெயலாளருக்குத் தெரிய வேண்டும். கதிரவெளிப் பிரதேசத்தில் நடைபெறும் மணல் அகழ்வு அப்பிரதேச செயலாளருக்க தெரியாது.

அண்மையில் கூட வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும் அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விரோதமான முறையில் கடற்படையினர் மற்றும் சில நபர்களும் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அருவியாற்று பகுதியினை அண்டிய சில குடியிருப்புகளின் வீடுகள் கடந்ந வருடம் பெய்த கடும் மழையில் நீரில் முழ்கியது. பாலத்தை பாதுகாக்க அருகில் கடற்படை முகாம் அமைக்க பெற்றுள்ள போதும், அதில் பாதுகாப்பு கடமையில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் குழுவினர்கள் தான் இப்படியான சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவ்விடயமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பதாகத் தெரியவில்லை.

பொதுமக்கள் பல தடவை வயல் பிரதேசங்களிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு முன்பாகவும் போராட்டங்கள் நடாத்தியதுடன் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் மகஜர்களையும் வழங்கியும் உள்ளனர். ஆனால் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

‘கிழக்கில் இருந்து’ எழுவான்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net