மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள்!

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்!

“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம். அதுதான் இப்பகுதியை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கின்றது” என்று கேப்பாப்புலவு மக்களை இன்று சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“நந்திக் கடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோரப் பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளைப் படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள்.

தற்போது போராட்டம் இடம்பெறும் கொட்டிலுக்கு அருகிலும் கிணறு ஒன்று இருந்தது. ஆனால், இப்போது அதுகூட இல்லை.

விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த 25 இற்கும் மேற்பட்ட கிணறுகளைப் படையினர் இடம் தெரியாதவாறு மூடியுள்ளார்கள். இது எங்களுக்கு சந்கேத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போரின்போது மன்னார் மனிதப் புதைகுழி போன்று ஏதாவது புதைகுழிகளை அல்லது தடயங்களை கிணறுகளில் இட்டு மூடியுள்ளனரா எனச் சந்தேகம் உள்ளது” – என்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net