ஆட்கடத்தல் விவகாரம்! வாழ்நாள் தடை விதிக்க தயாராகும் இலங்கை அரசு?

ஆட்கடத்தல் விவகாரம்! வாழ்நாள் தடை விதிக்க தயாராகும் இலங்கை அரசு?

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படகோட்டிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் விதமாக அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த 20ஆம் தினதி இத்தடை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான சட்டத்திட்டங்களை தயாரிக்க மீன்வளத்துறையின் இணை அமைச்சர் திலீப் வெதாரச்சி அத்துறையின் இயக்குனர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள், இது போன்று சட்டவிரோத செயல்கள் நடக்கும் போது படகு உரிமையாளரை தண்டிப்பது நியாயமற்றது, மாறாக இத்தவறில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் முறை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் பிரஞ்சு காலனிய பகுதியான ரீயூனியன் தீவுக்கு படகு வழியாக சென்ற 70 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் (இலங்கை மதிப்பில்) முதல் 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஆட்கடத்தல் நடவடிக்கை நடந்ததாகக் கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, படகோட்டிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டத்தில் மீன்வளத்துறை உள்ளது. இது போல், கடந்த காலங்களில் மீன்பிடி படகுகள் வழியாக ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருவதால் காலப்போக்கில் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்லும் முயற்சிகள் நீர்த்து போனமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 5850 Mukadu · All rights reserved · designed by Speed IT net