எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு வட கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமையத்தின் ஊடகபேச்சாளர் கே.தேவராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமையத்தின் நிர்வாக கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்துகாணாமல் ஆக்கபட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்பாட்ட பேரணியை ஏற்பாடுசெய்துள்ளது.

அன்றைய நாள் முழுவதும் வடமாகாணத்தில் ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு அனைத்து தரப்பிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பித்து டிப்போசந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் மகஜர் கொடுப்பதுடன் நிறைவடையும்.

பத்து வருடகாலமாக எமது கோரிக்கைகளிற்கு சரியான பதில்கள் அரசினால் வழங்கபடவில்லை. உறவுகளின் போராட்டங்கள் 700 நாட்களை தாண்டியும் அதற்கான பதில்களை இலங்கை அரசு வழங்கவில்லை.

கடந்த இரண்டுவருடங்களாக இலங்கை அரசிற்கு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை கால அவகாசத்தை வழங்கியிருந்தது. எனவே எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அரசிற்கு மீண்டும் கால அவகாசத்தை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவிக்கிறோம்.

அத்தோடு கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈடுபட்டிருப்பதனை நாம் அறிய கூடியதாக உள்ளது.

இந்த இரண்டு வருடத்தில் அரசானது எந்தவித முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் இருபதுக்கும் மேற்பட்டதாய் மார்கள் மரணத்தை தழுவியிருக்கின்றார்கள்.

எனவே இனிமேலும் கால அவகாசம் வழங்கபட கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் எந்தவித தீர்வுகளும் கிடைக்காத நிலையில் தொடர் போராட்டஙகளை மேற்கொள்வதற்கு நாம் எத்தணித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

குறித்தபோராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,பொதுமக்கள், அரசியல் வாதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு நாம் கேட்டுகொள்கின்றோம்.

அண்மையில் கிளிநொச்சியில் வைத்து பிரதமர் ரணில் மறப்போம், மன்னிப்போம் என்று எமது தலைவர்களிற்கு மத்தியில் கூறியநிலையில் அதனை ஒரு தமிழ் தலைமையும் தட்டி கேட்கும் நிலையில் இருக்கவில்லை.

எனவே அவர்கள் தமது பதவிகளை பாதுகாப்பதற்காக எம்மை பயன்படுத்துகிறார்களே தவிர மக்களின் பிர்சினைகள் பற்றி அவர்களிற்கு அக்கறையில்லை என்றும் கே.தேவராஜா குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net