என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்!

என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்!

“வரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம் தனக்கு புரிந்த விதத்திலே எடுத்த சில தீர்மானங்களினாலே ஒரு போர் உண்டாகிற்று.

அந்த போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொருவிதத்தில் மகிழ்ச்சியடைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.

அந்த போரில் ஏற்பட்ட வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாசாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும், அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம்.

ஆகையினாலே இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்ல. ஆனால் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெறவேண்டும்.

அந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கைவரவேண்டும்.

அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன். ஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை அது எந்தளவிற்கு தாங்கிக்கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக்கொள்கின்றது என்ற விடயமாகும்.

இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணிமட்டுமல்ல ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ணவேண்டும்.

நான் ஆளுநராக வரவேண்டும் என்று கனவுகாணவுமில்லை, சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்லவேண்டும்.

ஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவைபுரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்” என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net