பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு.

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு.

வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகளும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில்,

‘தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு அன்று தொடக்கம் ஆதரவு வழங்கி வருகின்றது.

அவர்களின் கோரிக்கைகள், நீதியானவை நியாயமானவை’ என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீண்டகாலம் போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். எந்தெந்த அரசுகளின் காலப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டார்கள், யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிக்காகப் போராடுகின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், மலையக சமூக ஆய்வு மையம், மலையக உரிமைக்குரல், தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net