மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது!

மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது!

ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் விஜயகட்டுப்பொத பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.நதீரா புஷ்பகுமாரி ( வயது 27) எனும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி குறித்த பெண் தனது வீட்டில் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட குறித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தர்க்கங்கள் ஏற்படுவதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணவன் – மனைவி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற 21ஆம் திகதி இவ்வாறு கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கணவர் தனது மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும் இதனையடுத்தே, குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போது, தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையாலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழந்த குறித்த பெண்ணின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளதாமையும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது மனைவி மீது தாக்குதல் தடத்தியதாக ௯றப்படும் 27 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாயா ரஞ்சன் உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net