கேப்பாப்புலவு விவகாரம்: மக்களும் இராணுவமும் பேசித் தீர்க்க நடவடிக்கை!

கேப்பாப்புலவு விவகாரம்: மக்களும் இராணுவமும் பேசித் தீர்க்க நடவடிக்கை!

கேப்பாப்புலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேராக பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மக்கள் நடத்தும் இந்த போராட்டம் ஏனைய பிரச்சினைகளை விட ஏதோ ஒரு காரணத்துக்காக சர்வமயப்படுத்தப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது.

இது 29 வருட போரும், 10 ஆண்டுகள் போருக்குப் பின் காலமும் அக்காலத்தில் அனேகமானோர் வந்து கதைத்துப் போயுள்ள விடயமாகவும் உள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நான்கு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளேன். ஆனால் இன்றைய சந்திப்பு எனது கடைசி சந்திப்பாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு நாம் ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம். மக்களும் இராணுவமும் இந்தப் பிரச்சினையை நேராக தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்துகொடுத்துள்ளோம். கேப்பாப்புலவில் போராட்டம் நடத்தும் மக்களில் தலைமையேற்கும் 3 பேரை இன்று சந்தித்தோம்.

அவர்களிடம் இந்த காணிப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி தீர்வு வழங்கியுள்ளோம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் நாளையிலிருந்து ஆரம்பிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net