2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி!

2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி!

சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் மனைவி பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு 2 எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி நேசராஜா (வயது 38) என்பவர் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சவூதி அரேபியாவில் சம்பவித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உயிரிழந்த நபரின் மனைவி ஹேமமாலினி (வயது 42) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

விபத்து சம்பவித்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டபோதிலும் தனது கணவரின் உடலை அந்நாட்டு அதிகாரிகள் இறுதிக் கிரியைகளுக்காக தன்னிடம் அனுப்பி வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய வயதிலான 4 குழந்தைகளைப் பராமரிக்க வழியில்லாது தான் மிகவும் வறுமை நிலையில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்திற்கும் இறுதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரான அலிஸாஹிர் மௌலானவிடமும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net