நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்!

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரெனக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்

“வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் அப்பாடசாலையின் உதவி அதிபராக செயற்பட்டுவரும் திரு.க.சசிதரன் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குறித்த உதவி அதிபர் தொடர்பாக அதிபரால் ‘தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை’ என்று கூறி யாழ்.வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் விளக்கம் கோரிய நிலையில் அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரின் நிதி மோசடி உட்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரத்துடன் யாழ்.வலயக்கல்விப்பணிமனையினருக்குமுறைப்பாடு செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்முறைப்பாடுகளில் பின்வருவன மிகப் பாரிய நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.

இக் கடிதத்துடன் குறித்த உதவி அதிபரால் – யாழ் கோட்டக்கல்வி அலுவலர் ஊடாக யாழ்.வலயக்கல்வி பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகளின் பிரதி தங்களின் மேலான கவனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன.

1. 2018 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15,000/- ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் – பற்றுச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2. 2017 ஆம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இறுதிக் கௌரவிப்பின்போது 100000/- ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை

3. ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட லப்டப் கணனி மற்றும் புறஜெக்டர் என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

4. 2018 ஆம் ஆண்டு நடனவிழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25000 ரூபா பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.

இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட் ஒரு அதிபரை அப்பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்து உதவி அதிபரை ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப்பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.

இவ்விசாரணையின் பொருட்டு சாட்சியங்கள் மறைக்கப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் காணப்படும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.

யாழ்.வலய குறித்த அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ்விதமான வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

இவ்விடயத்தில் கௌரவ ஆளுநராகிய தாங்கள் அதீத கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net