மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி

மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்த வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவை சந்தித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்வது குறித்து அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் ஜே.வி.பியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 20ஆம் திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு மஹிந்த தரப்பின் வாக்குகளும் அவசியமானதாகும்.

20ஆம் திருத்த சட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் 20ஆம் திருத்த சட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிசாட் பதியூதீன் போன்ற சிறுபான்மை சமூகக் கட்சித் தலைவர்களுடனும் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4217 Mukadu · All rights reserved · designed by Speed IT net