அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

நீண்ட காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பலொன்றை தாம் கைது செய்துள்ளதாகவும், கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராக்கள் குறித்த கும்பல் கைது செய்யப்படுவதற்கு உதவி புரிந்தன எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கும்பல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நெல் மூட்டைகளை களவாடிய சம்பவத்துடன் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் நெல் அறுவடையின்போது வீடுகளிலும், வீதியோரங்களிலும், வயல் நிலங்களிலும்.

அரிசி ஆலைகளிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் 300 க்கு மேற்பட்ட நெல் மூட்டைகளை இக்கும்பல் திருடியுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிபில, அக்கரைப்பற்று, காத்தான்குடி, மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இக்கும்பல் சம்மாந்துறை, பாலமுனை, அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும், வயல் நிலங்கள், வீதியோரங்கள் போன்றவற்றில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் களவாடியுள்ளனர்.

சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட நெல் மூட்டைகள் தரகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலும், தூர பிரதேசத்திற்கு விற்பனைக்காக நெல்மூட்டைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் லொறியொன்று நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேச நபர்களையும் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவததோடு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © 6119 Mukadu · All rights reserved · designed by Speed IT net