புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு

புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு

புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விலாவாரியாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடுகின்றது.

புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் மட்டும் கட்சிகள் இடையே இணக்கப்பாடு – ஒருமித்த கருத்து நிலவுவதால், அதிகாரப் பகிர்வை மட்டும் அரசமைப்பினுள் எப்படி புகுத்துவது, அதனை செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 4 பேர் கொண்ட புதிய குழு நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் , கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

புதிய அரசமைப்பு, ஐ.நாவின் கால அவகாசம் ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாமல் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர்.

இந்த நிலையில், இவை தொடர்பில் விலாவாரியாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடுகின்றது.

5ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. எனவே, அதற்கு முன் காலையில் அல்லது மாலையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net