சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

இந்தியாவிலுள்ள சென்னை விமான நிலையத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பயணிகளை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், மோப்ப நாய்களும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு முனையங்களுக்குள் உறவினர்களை வழியனுப்ப வருவர்கள் வழமையாக அனுமதிக்கப்பட்டு வந்த போதிலும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

அத்துடன், மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு அருகிலுள்ள விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் கொழும்பிலுள்ள விமான நிலையம் மற்றும் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் விமான சேவைகள் தொடர்பில் எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா – பாக்கிஸ்தான் எல்லையிலும் பதற்ற நிலை தொடர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8151 Mukadu · All rights reserved · designed by Speed IT net