குடிநீர் தேவையை தீர்த்து வைக்க முடியாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

குடிநீர் தேவையை தீர்த்து வைக்க முடியாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை – மக்கள் விசனம்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரிவிற்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களிற்கான குடிநீர் திட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியாத பிரதேச சபைக்கு நாம் வாக்களித்தோம் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த மக்களின் குடிநீர் தேவைக்காக பல லட்சம் ரூபா செலவில் நீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த திட்டம் முழுமை பெறாமை தொடர்பில் ஏற்னவே மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

குறித்த திட்டம் கொண்டு வரப்படுவதற்காக குடும்பம் ஒன்றிடமிருந்து 100 ரூபா பணம் சேகரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருக்கும் பகுதிகளிற்கு அருகில் பொது குழாய்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

பிரதேச சபையினரிடம் மக்களின் வீடுகளிற்கு குறித்த இணைப்புக்களை வழங்கி மாதாந்த அறவீடு மேற்கொள்ளுமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

எனினும் அதனை பொருட்படுத்தாத பிரதேச சபையினர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். பிரதேச சபையினரால் நீர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து மக்களும் குடிநீர் வசதியை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த வசதிக்காக பயன்படுத்தப்பிட்ட மின்னலகு 35 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாக சென்ற நிலையில் மின்சார சபையினரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்ற போதிலும் அவர் அலட்சிய போக்கையு கடைப்பிடித்ததாகவும், அந்த மின் கட்டணத்தை மக்களே செலுத்த வேண்டும் என தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மக்கள் குடிநீருக்காக அங்கலாய்த்து வரும் நிலையில், இவ்வாறானவர்களிற்கா நாம் வாக்களித்தோம் என விரக்தியடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலை ஏற்படும் என்பதாலேயே தாம் வீட்டுக்கு இணைப்பு வழங்குமாறும், பாவனை கட்டணத்தை தாம் செலுத்துவதாக கூறியதாகவும் தெரிவிக்கும் மக்கள், இவ்வாறு பாரிய தொகை ஒன்றை மக்களிடம் சுமத்தியமை தொடர்பில் பிரதேச சபையினர் மீதும் கடும் அதிர்ப்தியினை வெளியிடுகின்றனர்.

பாரிய செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த குடிநீர் திட்டம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிரதேச சபையினரின் அசமந்த போக்கு தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த் திட்டத்தினை விரிவுபடுத்தி, வீட்டுக்கு வீடு இணைப்பினை வழங்கி கட்டணத்தை அறவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 3003 Mukadu · All rights reserved · designed by Speed IT net