சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு!

சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு!

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் இதனை அறிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவின் புனரமைப்பு வேலைகளுக்குச் சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடையூறு விளைவித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு மாற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.

எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையிலிருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்து குருமார் பேரவையில் உள்ள இந்து குருமார்கள் வெளியேறிக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக நாளை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனிகள் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது இரு மதத்தினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net