அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி புனரமைப்பிற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு.
முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணுக்காயிலிருந்து அக்கராயன், முழங்காவில், கிளிநொச்சி போன்ற இடங்களுக்கான முக்கிய போக்குவரத்து வீதியாக அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி உள்ளது.
சுமைகளுடன் செல்லும் பாரவூர்திகளினால் மீண்டும் மீண்டும் குறித்த வான்பகுதி சேதமடைகின்ற நிலையில், மேம்பாலத்தினை அமைப்பதற்கான திட்டமிடல்களை வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் இன்று மேற்கொண்டுள்ளது.
இதற்காக 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும் மழை பெய்யுமானால் அம்பலப்பெருமாள் குளத்தின் வான்பகுதி உடைப்பெடுக்கக் கூடிய அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.