மன்னாரில் மதம் கடந்த மனிதம் வேண்டும்!
மன்னாரில் மனிதத்தை விட மதத்திற்கு முக்கியத்துவமளிப்பது மிகுந்த வேதனை என மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கட்டமைக்கப்பட்ட சுய ஒழுக்க நெறியை மரவு சார் கலாசார பாரம் பரிய விழுமியத்துடன் பின் பற்றுவதே சமய நெறி முறை ஆகும்.
அவரவர் தத்தமது மதத்தை பின் பற்றுவதும் விசுவாசிப்பதும் சுய விருப்பிலானது. அது மற்றவர்களுக்கு பாதகமில்லாமல் அமையவேண்டும் என்பதே பண்பாட்டியல் கேட்பாடாகும்.
உணர்வடிமைக்குள் சிக்குண்டு அறிவுக் கண்களை மூட முயல்வது ஆரோக்கியமன்று. தமிழர்கள் தேசியத்தைக்கடந்து சமயத்துக்குள் பிளவுபடுவது பொது எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.
இதனை சமயத்தலைவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே திருக்கேதீஸ்வரச் சம்பவம் ஏற்புடையதன்று .வன்முறை நீதியை நிலை நாட்ட வல்லதல்ல.
மேலும் சமூக பிறழ்வை கூட்டு வன்முறைக்கு தூபமிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானதே. அதை சமப்படுத்துவதற்கு ஆரோக்கியமான இதயபூர்வமான கலந்துரையாடல் மேற் கொள்வதே சாலச் சிறந்தது.
சமூக ஊடகங்கள் பெரு வளர்ச்சி பெற்று விட்ட நிலையில் பொது வெளியில் சட்டத்தை தம் வசப்படுத்தி அசாதாரண சூழ்நிலை யை ஏற்படுத்துவது அறிவுபூர்வமான முன்னகர்வாக அமைந்துவிடாது.
ஆகவே சம்மந்தப்பட்டவர்கள் பொது வெளி நாகரீகத்தை கருதி பக்குவமாக வார்த்தைகளை பேசி உரிய அணுகு முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதுவே மத நிந்தனை. எனவே மதம் எனும் சிறைக்குள் யாரும் சிக்குண்டு விடாதீர்கள்.
மனிதத்துவம் ஐக்கியப்பட நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதே அவசியமாகும். ஒரு சிலரின் அர்ப்பத்தனமான செயற்பாட்டிற்காக ஒரு சமூகத்தை முழுமையாக குற்றம் சாட்டுவது முறையல்ல.
அடிப்படை வகுப்பு வாத சிந்தனைகள் களையப்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் வன்முறையற்ற புரிந்துணர்வை ஏற்படுத்த முரண்பட்ட தரப்புக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.