வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காணி கையளிப்பதற்கான நிகழ்வு நேற்று(04) யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி விடுவிப்பதற்கான ஆவணத்தை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் வழங்கி வைத்தார்.

யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் வலி.வடக்கில் பலாலி வடக்கு மற்றும் ஏனைய பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று (04) பலாலி வடக்கு உட்பட மயிலிட்டித்துறை பகுதியில் உள்ள 3 கிராம சேவையாளர் பிரிவில் காணி விடுவிக்கப்பட்டது.

வலி.வடக்கு பலாலி கிழக்கு ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும், ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும், ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் அதன் பாதையுமாக மொத்தம் 19.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் 20 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 4916 Mukadu · All rights reserved · designed by Speed IT net