பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்!

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பல காணிகள் காடுகளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் 2011ஆம் ஆண்டளவில் ஓமந்தை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்பு காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களில் வேலை உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வீடமைப்பதற்காக அரச மானியமாக 5 லட்சம் ரூபா சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கின்றது.

600 அரச ஊழியர்களுக்கு ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும் 65 காணிகளில் மாத்திரம் அரச ஊழியர்கள் வீடுகளை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

மிகுதி 155 காணிகள் முழுமையாக காடுகளாக காணப்படுவதுடன், 200 காணிகளில் கிணறு மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும், 130 காணிகள் வீடு மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் மொத்தமாக 485 காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.

இவ் விடயம் தொடர்பாக ஓமந்தை அரச விட்டுத்திட்டத்தில் வசிக்கும் அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் வேறுஇடங்களில் காணிகள் இருப்பதினால் இங்கு அவர்கள் வருவதில்லை.

600 அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தற்போது 65 அரச ஊழியர்களே வசித்து வருகின்றோம். மிகுதி காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதினால் நாங்கள் பாரிய அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.

பாம்புகள், காட்டு உயிரினங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மற்றும் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதினால் நாங்கள் வேலைக்கு சமூகமளிக்கும் சமயத்தில் திருடர்களின் தொல்லைகள் காணப்படுகின்றது.

எனவே காடுகளாக காணப்படும் காணிகளை அரசாங்கம் மீள அவர்களிடமிருந்து கையகப்படுத்தி காணிகள், வீடுகள் அற்று வவுனியாவில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net