“துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி தாங்க”
‘பொள்ளாச்சி கொடூரத்தால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம்; எனவே, எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கொடுங்க’ என, கோவை மாவட்ட கலெக்டரிடம் மாணவிகள் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழத்தின் கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார்.
இவரது மகள் தமிழ் ஈழம். இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
இவருடைய தங்கை ஓவியா; இவர், துடியலூர் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும், கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அந்த மனுவில் “பொள்ளாச்சி வன்புணர்வு சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கும்போது, எங்களுக்கு மிகுந்த அச்சமாக உள்ளது. இத்தனை நாட்களாக பொலிஸார் இதை கண்டுகொள்ளாமல், அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது.
எனவே, எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதற்கு, துப்பாக்கி வைத்துக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று, கூறப்பட்டிருந்தது.
எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்’ என கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் மனு கொடுத்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.