மனித உரிமைப் பேரவையால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது!
மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இப்போது ஐ.நா.வினது மனித உரிமைப் பேரவையில் ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சேர்ந்து பிரேரித்திருக்கின்றன.
ஆனால் குறித்த தீர்மானங்களால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த முடியாது. இவைகள் ஒரு ஆலோசனைகளாகவே கருதப்படும். ஆகவே இலங்கை அரசு அதை விரும்பினால் அமுல்ப்படுத்தும்.
அவ்வாறு விரும்பாவிட்டால் அமுல்ப்படுத்தாது என்ற நிலைமைகள் இந்தத் தீர்மானங்களில் இருக்கின்றன. எனவே நாம் தொடர்ர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் குறித்த தீர்மானங்கள் நீர்த்துப்போகாமலிருக்கச் செய்யலாம்.
ஆகவேதான் அண்மையில் தமிழ்க் கட்சிகள் கையெழுத்துப் போட்ட ஒரு கோரிக்கை மனுவிலே ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.
அதாவது இங்கு ஒரு பிரத்தியோக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இங்குள்ள நிலைமைகளை மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையிட வேண்டும்.
இவற்றைக் கூட மனித உரிமைப் பேரவை அமுல்ப்படுத்த முடியாது. அதாவது இலங்கையை கட்டுப்படுத்த முடியாது.
ஆகவே தான் ஐ.நா சபையின் மேல்த் தளங்களுக்கு இவ்விடயத்தினை எடுத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டு நிற்கின்றோம்” என சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.