ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி!

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக அந்த நாட்டுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக இலண்டனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைச் சந்தித்து கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் இலண்டன் பிரிவுத் தலைவர் ஆர்.டி.இரத்தினசிங்கம், வண.பிதா எஸ்.ஜே.இம்மானுவேல் ஆகியோருடன் சென்ற சுமந்திரன் எம்.பி. அங்கு பிரிட்டனின் தெற்காசியப் பிரிவுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான பேர்குஸ் ஒல்டை கடந்த வெள்ளியன்று சந்தித்தார்.

அச்சமயமே மேற்படி புதிய பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காகக் கூட்டமைப்பின் நன்றியைப் பிரிட்டனுக்குத் தெரியப்படுதினார் சுமந்திரன் எம்.பி.

ஏற்கனவே இலங்கை தொடர்பாக 2015இல் இலங்கையும் சேர்ந்து ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் இந்த மூவர் குழு பிரிட்டன் தரப்பை வலியுறுத்தியது எனவும் அறியவந்தது.

Copyright © 7538 Mukadu · All rights reserved · designed by Speed IT net