ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை முற்றுகையிடப்போகும் இலங்கை தரப்புக்கள்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை முற்றுகையிடப்போகும் இலங்கை தரப்புக்கள்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரசதரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேசவுள்ளனனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் நாளை மறுநாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்கு அடுத்த நாள், மார்ச் 21ஆம் நாள், இலங்கை தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த இரண்டு நாள் அமர்வுகளிலும், பக்க அமர்வுகளிலும் பங்கேற்பதற்காக, இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் ஜெனிவாவில் குவியத் தொடங்கியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, சரத் அமுனுகம, சுரேன் ராகவன் மற்றும் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரை உள்ளடக்கிய அரச தரப்புக்குழு இன்று காலை ஜெனிவா சென்றடைகிறது.

இந்தக் குழுவினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரையும் சந்தித்து பேசவுள்ளனர்.

ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து அவர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.

அதேவேளை, அரசாங்கத்தை தொடர்ந்தும் ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பசெலெட் அம்மையாரைச் சந்திக்கவுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net