மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை ஒப்படைக்கவில்லை!

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை ஒப்படைக்கவில்லை!

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை என காணாமற்போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் பிடித்துச்சென்று காணாமலாக்கப்பட்டுள்ள நிலையில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பிரதமர் எவ்வாறு கூறமுடியும் என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்.

இம்மாதத்திற்குள் நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இங்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதற்கு இடமேயில்லை. நாங்கள் ஆடு மாடுகளைக் கொடுக்கவில்லை.

நாங்கள் கொடுத்தது எமது உறவுகளை. வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் அவர்கள் பிடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

எனவே எக்காரணம் கொண்டும் கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது. ஏற்கனவே இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டும் இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் செய்யவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் இருக்கிறார்களோ, இல்லையோ? என்பதனை நீதியுடன் கூற வேண்டும்.

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் ஐ.நா.வை நம்பியுள்ளோம். ஆனால் ஐ.நா.விடம் இலங்கை மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரி அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? எனவே ஐ.நா.சபை இலங்கை அரசாங்கத்திற்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாது’ என்று தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக கிழக்கு மாகாணத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவு வழங்கவேண்டும் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் கோரியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net