திருகோணமலையில் டிப்பர் கோர விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்!
திருகோணமலை -ஹொரவபொத்தானைபிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்றவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த வாகன சாரதியான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், இவ்வாறு உயிரிழந்தவர் கல்பிட்டி – கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த தனுஷ்க மதுரங்க (20) மற்றும் அவரது தந்தை அன்டனி எலிஸ் ரொஷான் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், கல்பிட்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுப்பதற்காக டிப்பர் லொறியில் சென்று கொண்டிருந்த போது, பின் புறமாக வந்த பட்டா வகை லொறி ஒன்று மோதியதாகவும் அதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.