பாகிஸ்தானின் தேசிய தினத்தை புறக்கணித்தது இந்தியா!
பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் பங்கேற்குமாறு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்தியா குறித்த நிகழ்வினைப் புறக்கணித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய தினம், அந்நாட்டில் இன்று (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
அதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது,
“பாகிஸ்தான் தூதரகத்தில் இடம்பெறும் அந்நாட்டின் தேசிய தின நிகழ்வுக்கு, தேசிய காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்நிகழ்வில் இந்திய அரசு சார்பில் யாரையும் அனுப்புவது இல்லையென தீர்மானித்துள்ளோம்” என ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.