ஆவா குழுவை மடக்கிய பொலிஸாருக்குப் பணப் பரிசில்!
தலைமறைவாகியிருந்த ஆவாக் குழுவினை மடக்கிப்பிடித்த பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக ஆவா குழுவினரின் அட்டாகசம் வடக்கில் தலைவிரித்தாடியது.
இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை இக்ரம் உள்ளிட்ட 6 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் அநேக இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் முக்கியமான நபர்கள் தேடப்பட்டுவந்தனர்.
அவர்களில், இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, அவர்களில் மொகமெட் இக்ரமுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட 4 வழக்குகளைப் பொலிஸார் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இதன் மூலமாக யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களின் முன்னாள் பொறுப்பதிகாரிகள், குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி, நாடுமுழுவதும் வன்முறைக் கும்பலைகளைக் கட்டுப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஆவா குழுவினரின் கைது நடவடிக்கையையின் மூலம் பெரும் வன்முறைகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தியமையைப் பாராட்டியும், அவர்களின் கடமையை சரியாகச் செய்தமையை ஊக்கப்படுத்தியும் இக் கௌரவிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.