விபத்தில் சாதுரியமாகத் தப்பிய உடுப்பிட்டி பஸ் சாரதி.

விபத்தில் சாதுரியமாகத் தப்பிய உடுப்பிட்டி பஸ் சாரதி.

இலங்கை சோசலிசக் குடியரசின் பொருளாதாரத்தை கட்டி வைத்திருப்பதில் மதுப்பாவனை என்பது பெரும் பங்காற்றி வருகிறது.

அதிலும் அதிகளவு நுகர்வோரைக் கொண்ட வடபகுதியில் போதையில் அகப்படும் சாரதிகள் தொகை அதிகரித்து வரும் வேளைகளில், இடம்பெறும் விபத்துக்களில் இருந்து சாதுரியமாகவும் பொலிசாரை ஏமாற்றியும் விலைக்கு வாங்கியும் தப்பும் சாரதிகள் தாராளமாகவே உள்ளார்கள்.

இரவு தலைகீழாகக் குடித்து விட்டுக் கிடக்கும் சாரதி ஒருவரால் அதிகாலையில் தெளிவாக வாகனம் செலுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்த போதும் இச் செய்தியில் இடப்பட்டுள்ள வாகனத்தையும் அதில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பும் வீதியில் பயணித்தவரையும் பாருங்கள்.

காலை வேளையில் மிக வேகமாக அரச பேருந்தை முந்திக் கொள்ளும் இந்தத் தனியார் பஸ்சை ஓட்டுனரால் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் அவ் வீதியில் இருந்த ஒரு வீட்டின் மதிலைப் பதம் பார்த்து நீண்ட தூரம் பயணித்து ஓய்வுக்கு வருகிறது.

இந்த ஓட்டுநரின் பொறுப்பற்ற தனத்தால் வீதியில் போன ஆட்டோக்காரர்களும் ஒரு பாதசாரியும் மயிரிழையில் உயிர் தப்பிக் கொள்கிறார்கள்.

இவற்றை விட அந்த பஸ் உயரழுத்த மின்கம்பத்தில் மோதாமல் தப்பித்ததால் பின்னுக்கு வந்த அரச பேருந்தில் இருந்த அத்தனை பயணிகளும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் சேதமான மதிலை சில மணிநேரத்துக்குள் கட்டி முடித்ததுடன் காயப்பட்ட ஓட்டுநரை நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் என்ற தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை பெற்றதுடன் இந்த பெரிய சம்பவம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

பணத்துக்காக இயங்கும் அந்த தனியார் வைத்தியசாலையும் அவரது முழுப் பரிசோதனையையும் மேற்கொள்ளாமல் பிரச்சனையை மறைக்க உதவியுள்ளது.

வல்வெட்டித் துறைப் பொலிஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இச்சம்பவம் நடந்திருந்தாலும் சம்பவ இடத்துக்கு பொலிசார் வர முதலே அவர்களுக்கும் பிரச்சனைசார்ந்தவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு ஒரு பெரும் விடயம் மூடி மறைக்கப்பட்டு விட்டது.

இறுதிவரைக்கும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

சட்டத்தின்படி உடைந்த மதிலானாலும் வீதியில் அமைந்திருக்கும் பட்சத்தில் மீள பிரதேச சபையின் அனுமதி எடுத்துத் தான் கட்ட வேண்டும். இந்த விடயத்திலும் சட்டம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

பஸ்சின் இயந்திரக் கோளாறு தான் காரணம் என்று சம்பவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் சம்பவத்தின் உண்மைநிலை அறிந்த பாதிக்கப்பட்டவர் கூட அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கத் துணை போகாத ஒரு சமூகத்தில் இன்னும் இன்னும் குடிப்பாவனை சாரதிகளால் விபத்துக்கள் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் இல்லை.

Copyright © 5487 Mukadu · All rights reserved · designed by Speed IT net