யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்?

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்?

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அது எங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், யுத்த காலப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முகாம்களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் ? என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளிலும் அதே நேரத்தில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பாரிய முகம்களை தற்காலிகமாக அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல இராணுவ , கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாங்கள் காணாமல்போன எங்களுடைய பிள்ளைகளை தேடி அழைகின்றோம்.

எங்கள் உறவுகள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்கள் அந்த முகாம்களை நிறந்தரம் ஆக்கிவிட்டார்கள் என்றால் அவ் முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வர போகின்றது.

அதனால் தான் அவர்கள் மறைமுகமாக அந்த காணிகளை தங்களே கையாள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

எனவே ஒரு போதும் இந்த காணிகளை நிறந்தரமாக வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் வங்கியாக இருந்த பகுதியை இராணுவம் முகாம் ஆக்கி வைத்திருந்தது.

அதே போன்று சனிவிலச் கடற்படை முகாம், பள்ளிமுனை முகாம், அவற்றில் எல்லாம் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

ஏன் என்றால் அவ் முகாம்களில் எல்லாம் யுத்த காலத்தில் மக்களை கூட்டிச் சென்று விசாரித்த இடங்கள். அதுக்குள்ளும் நிறைய எலும்புக்கூடுகள் வரலாம் என சந்தேகம் இருக்கின்றது.

அதனால் அந்த காணிகளை கடற்படைக்கோ , இராணுவத்திற்கோ எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் .

வழங்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு நிறந்தரம் ஆகிவிடும் எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காது.

எனவே பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net