பொலிசார் மீது எமக்கு நம்பிக்கையில்லை ; பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை முற்றுகையிட்ட மக்கள்!
வவுனியா, ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாகவும், தங்களை தாக்கியவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை என தெரிவித்தும் சின்னப்புதுக்குளம் மக்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன் திரண்டு அமைதியான முறையில் முற்றுகையிட்டனர்.
இன்று மாலை வவுனியா ஏ9 வீதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் பிரதான வாயில் முன் ஒன்று கூடிய சின்னப்புதுக்குளம் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, சின்னப் புதுக்குளம் கிராம மக்களுக்கும், நொச்சிமோட்டைப் பகுதி மக்களுக்கும் இடையில் கிராம ரீதியாக நீண்ட நாட்களாக முரண்பாடு இருந்து வருகின்றது.
சாதியத்தின் அடிப்படையில் எழுந்த இம்முரண்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அடிதடியில் சென்றிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர், கிராம அலுவலர், பொது அமைப்புக்கள், மதத்தலைவர்கள் இணைந்து இரு பகுதியினருடனும் கலந்துரையாடி நிலமையை சீர் செய்திருந்தனர்.
இருப்பினும் இரு பகுதியினருக்கும் இடையில் இதன் பின்னும் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஓமந்தை சின்னப்புதுக்குளம் வீதியில் அக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இம் மோதல் காரணமாக ஈரு மோட்டர் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரை ஓமந்தைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் சின்னப் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஓமந்தைப் பொலிசார் தாம் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் தமது கருத்துகளை கேட்காது தம்மீது தாக்குதல் நடத்தி தமது சொத்துக்களை சேதப்படுத்தி அழித்தவர்களை கைது செய்யாது, அந்த கிராமத்திற்கு சார்பாக நடப்பதுடன், தமக்கு எதிராக செயற்படுகின்றனர் என அக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பொலிசாரின் இந்தநிலை காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓமந்தைப் பொலிசார் மீது எமக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்தே சின்னப் புதுக்குளம் கிராம மக்கள் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் அலுவலக வாயில் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
இதன்போது இம் மக்கள் சார்பாக சிலரை அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் இப்பிரச்சனை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், சின்னப்புதுக்குளம் கிராமத்திற்குரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தையடுத்து, அதனையேற்று அக் கிராம மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
டிப்பர், ஹன்ரர் ரக வாகனம், பிக்கப் என்பவற்றில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாது அந்தக் கிராமத்தைச் சோந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.