கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9.30 மணியளவில் இணை தலைவர்களான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா. ம உறுப்பினர் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் பா. ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள் சார் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் காணி, வீட்டுத்திட்டம், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இன்றைய கூட்டத்தில் செஞ்சோலை காணி விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த காணியை அவர்களிற்கு பகிர்ந்தளிக்கும் வகையில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் தீர்மானமும் எட்டப்பட்டது.

விடுதலைபுலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் யுத்தத்தின் பின்னர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த நிலையில் மலையாளபுரம் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்த காணியில் தற்போது 64 பிள்ளைகள் குடும்பங்களாகிய நிலையில் கொட்டகைகள் அமைத்து அங்கு வாழ்கின்றனர்.

அவர்களிற்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதற்கு மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம் நிறைவேற்றியது.

குறித்த காணியை 13 உரிமையாளர்கள் தமது காணி என தெரிவித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த நிலையில் யாருக்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதென்ற நிலையில் உள்ளதாகவும் அரச அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

எனினும் குறித்த காணி விடுதலைப்புலிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகவும், அந்த காணியை உரிமை கோருபவர்களிற்கு வேறு காணிகளும் உள்ளமையால் அதை செஞ்சோலை பிள்ளைகளிற்கே வழங்க வேண்டும் எனவும் , காணி உரிமை கோருபவர்களிற்கு வேறு காணி வழங்கலாம் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

ஆணைவிழுந்தான் பகுதியில் 1986ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களிற்கு தலா ஒரு ஏக்கர் வயல் காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும், இன்றுவரை குறித்த காணி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அவர்களிற்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கூட்டத்தில் கூறப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் ஓர் தினம் நியமிக்கப்பட்டு அப்பகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மக்களுடன் ஏற்பாடு செய்து தீர்வு காணப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மணல் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பிலும், அதிக விலையில் மணல் விற்பனை செய்யப்படுகின்றமை தொடரப்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர்களினால் வீட்டுத்திட்ட பயனாளிகளிற்கு விசேடமான முறையில் மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு அதிகாரத்தினை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய பொலிசாரும், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கனியவள திணைக்களம் உள்ளிட்டோர் மக்களின் வீட்டுத்திட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு கடுமையான கெடுபிடிகளை மேற்கொள்ளாது, பிரதேச செயலாளரினால் வழங்கப்படும் மணல் அனுமதிப்பத்திர பயனாளிகளிற்கு உதவுமாறும் வேண்டுகை விடுக்கப்பட்டது.

இதன்படி வீட்டுத்திட்ட பயனாளிகள் அவ்வந்த பிரதேச செயலகங்களில் தமக்கான வீட்டுத்திட்டத்திற்கான மணல் அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்காக பூநகரி பிரதேசத்தில் கௌதாரிமுனை பகுதியிலிருந்து எடுத்து செல்லப்பட்ட மணலினால் ஓரளவு குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஓர் கோரிக்கையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரால் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வினை பூநகரி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் மீண்டும் பூநகரி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே பேசி தீர்மானிக்க முடியும் எனவும் பா ம உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை அவர்களிடமே கையளிக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபோது குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. கிளிநொச்சி மாகாவித்தியாலயத்திற்கு சொந்தமான 4.5 ஏக்கர் காணியில் கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும். குறித்த காணியை பாடசாலை சமூகத்திடமே கையளிக்க வேண்டும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த காணி அரசாங்கத்தினால் பாடசாலைக்கான விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதேவேளை கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான 10 ஏக்கர் விளையாட்டு மைதான காணியையும், குறித்த பாடசாலை காணியையும் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் படையினர் தம்வசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த காணியை அப்போதைய அரசாங்கம் சர்வதேச தரம் மிக்க விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு படையினரிடம் இருந்து குறித்த காணியை விடுவித்ததாகவும், அதன் பின்னர் அங்கு கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் இதன்போது குறித்த கூட்டத்தில் விளக்கமளித்தனர். இந்த நிலையில் குறித்த 4.5 ஏக்கர் காணியை பாடசாலையின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான 10 ஏக்கர் விளையாட்டு மைதான காணியையும் தம்மிடம் கையளிக்குமாறும் இதன்போது கரைச்சி பிரதேச சபை தவிசாயர் அ.வேழமாலிகிதன் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net