போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன!
போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
போதைப்பொருட்கள் சட்டவிரோதமான முறையில் இடம்பெறுகின்றன. கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இது தொடர்பில் முப்படையினர் உட்பட சகல பாதுகாப்பு பிரிவினரும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு மக்களின் உதவி நாட்டுக்கு தேவைப்படுகின்றது” என மேலும் தெரிவித்துள்ளார்.