வவுனியாவில் அட்டகாசம்! 110 பேர் வைத்தியசாலையில் : 8 பேர் கைது!

வவுனியாவில் அட்டகாசம்! 110 பேர் வைத்தியசாலையில் : 8 பேர் கைது!

புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருட தினமான நேற்று காலை 6 மணியில் இருந்து இன்று நண்பகல் வரை இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு, அடிதடி, குழுமோதல், வாள்வெட்டு, வாகன விபத்து என்பன காரணமாகவே காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுவருட தினமான நேற்று காலை 6 மணியில் இருந்து நேற்று இரவு 12 மணிவரை 62 பேரும், இன்று அதிகாலை 12 மணியில் இருந்து நண்பகல் வரை 48 பேரும் இச் சம்பவங்களால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் சிறு காயங்களுக்கு உள்ளானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வரும் நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதடைந்த நிலையில் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இக்குழு மோதல் தொடர்பில் மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும், பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதுவருட தினத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net