நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

நளினி பிணை தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மகளின் திருமணத்திற்காக 6 மாதங்கள் பிணைக் கோரி, நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பிணைக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையின்போது, தானே வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகளான சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கியோரின் அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன்11 ஆம் திகதிக்குள் தமிழக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவசரமாக பிணைத் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 11 ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net