ஜனாதிபதியே அரசியல் தீர்வில் குழப்பத்தினை ஏற்படுத்தியவர்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றில் குழப்பத்தினை ஏற்படுத்தி விட்டாரென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை அம்பிளந்துறை சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா நடைபெற்றது.
குறித்த விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞா.சிறிநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மக்களை மிகமோசமான நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது என்பதற்காகவே வரவு- செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
குறித்த செயற்பாட்டினால் 50கோடிக்கும் அதிகமான நிதிகளை அபிவிருத்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கையாளக்கூடிய நிலையேற்பட்டுள்ளது.
இவ்வாறு அபிவிருத்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் அரசியல் தீர்வுஎன்பதே எங்களுக்கு மிக முக்கியமான விடயமாகும்.
குறித்த அரசியல் தீர்வுக்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளை நம்பிக்கையுடன் முன்னெடுத்து வந்தோம்.
ஆனால் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு விடயத்தினை குழப்பியுள்ளார்” என ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.