யாழ்ப்பாண பல்கலையில் ஆங்கிலமொழி ஆய்வரங்கு.

யாழ்ப்பாண பல்கலையில் ஆங்கிலமொழி ஆய்வரங்கு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறை, ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வகையில் முதன்முதலாக ஆங்கிலமொழிக் கற்பித்தல் சம்பந்தமான ஆய்வரங்கை நடத்த முன்வந்துள்ளது.

எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி கைலாசபதி அரங்கில் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கு குறித்து, ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறைத் தலைவர் கந்தையா ஸ்ரீ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

யாழ் பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையானது எதிர்வரும் மே 10ஆம் திகதி முதன் முறையாக ஆங்கிலமொழிக் கற்பித்தல் ஆய்வரங்கு ஒன்றை கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலமொழிக் கற்பித்தலில் கல்விசார் நடைமுறைகளை ஊக்குவித்தல் – எதிர்பார்ப்புக்களும் யதார்த்தங்களும் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன.

பிரதான பேச்சாளராக அமெரிக்க பெனிசில்வேனியா பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியரும், முன்னாள் யாழ் பல்கலைக்கழக ஆங்கிலமொழி போதனா அலகின் தலைவருமான கலாநிதி சுரேஷ் கனகராஜா கலந்து கொள்கிறார்கள்.

அத்துடன் இந்தியா, மலேசியா நாட்டுப் பேராசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.

இவ் ஆய்வு அரங்கானது ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் கற்போருக்கான அனுபவ பகிர்வு அரங்காகவும், சமகால கல்விசார் நடைமுறைகளை ஆய்வு செய்து அதில் வரும் பிரச்சினைகளுக்கு ஆய்வு ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அமையும்.

பல்வேறு உபதலைப்புக்களில் கட்டுரைகளை சமர்ப்பிக்கும்படி ஆய்வாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வுச் சுருக்கங்களை நாளைய தினத்திற்கு முன்னர் selt@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

மேலதிக விபரங்களுக்கு ஆய்வரங்கு இணைப்பாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேஷனை 0779074947 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net