குழாய் மூலம் வழங்கப்படுகின்ற நீர் தொடர்ச்சியாக வராமையால் மக்கள் சிரமம்!
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம் போன்ற கிராமப் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டுவரும் குழாய் மூலமான நீர் சீரான முறையில் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
தற்போதைய வறட்சியான காலநிலையில் கிணறுகள், வாய்க்கல்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ள நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் சீராக கிடைக்காமையானது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளாந்தம் வரும் நீர் காலையில் 8 மணிக்குப் பின்னர் நிறுத்தப்பட்டுவிடும், மாலை 6 மணிக்குப் பின்பும் நிறுத்தப்பட்டு விடும், இவற்றைவிட வெள்ளிக்கிழமைகளில் நீர் முற்றாக வராது.
இதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த கஸ்ட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
சில உள் வீதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் பெறுவதற்கான இணைப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மண்டூர், நிலையப் பொறுப்பதிகாரி அ.ஜெகதீபனிடம் இன்று தொடர்பு கொண்டு கேட்ட போது,
தற்போது வறட்சிகாலம் ஆகையால் நீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு இடத்தில் சேமிக்கின்ற நீர் தான் பல இடங்களுக்கு அனுப்பப் படுகின்றது.
தற்பேதைக்கு வழங்கப்டுகின்ற குடிநீர் சீராக வரமுடியாத நிலைமைதான் காணப்படுகின்றது. ஏனெனில் பகலில்தான் நீர் வழங்குகின்றோம், இரவு வேளையில் நீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் மிகவிரைவில் அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியான நீர் வழங்கக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் செறிவாக உள்ள இடங்களுக்கு தான் தற்போதைக்கு நீர் வழங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏனைய இடங்களுக்கு பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளும் எமது அடுத்த திட்டத்தினுடாக எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.