யாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை!
இலங்கையில் பல பிரதேசங்களில் மழை பெய்தாலும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த வாரம் வரை நீடிக்கும். மழையுடன் பாரிய அளவிலான மின்னல் தாக்கம் கூடும்.
மின்னலினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பொது மக்கள் நடவடிககை மேற்கொள்ள வேண்டும் எனவும் திணக்கள அதிகாரி சசித்ரா ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, மேல், வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலை நேரத்தில் மின்னலுடனான மழை பெய்ய கூடும் என அவர் கூறியுள்ளார்.
வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசத்தில் சாதாரண வெப்பநிலையை விடவும் 3 பாகை செல்சியஸ் அதிகமாகவும், பதுளை, மட்டக்களப்பு, குருணாகல், நுவரெலியா, புத்தளம், இரத்மலானை பிரதேசத்தில் சாதாரண வெப்பநிலையை விடவும் 2 பாகை செல்சியஸ் அதிகமாகவும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்கு அதிக வெப்பநிலையாக 37.5 செல்சியஸ் வெப்பநிலை வவுனியாவிலும், குறைந்த வெப்பநிலையாக 12.6 செல்சியஸ் வெப்பநிலை நுவரெலியாவிலும் பதிவாகியுள்ளது.