மன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு
மன்னார் மாந்தைப் பகுதியில் மர்மப் பொதி ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப் பகுதியில் காணப்பட்ட மர்மப்பொதியில் இருந்தே கைத்துப்பாக்கி ஒன்றை படையினர் இன்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொதி ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
விரைந்து செயற்பட்ட அடம்பன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் ராணுவத்தினரையும் அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தியதோடு மர்மப் பொதியையும் சோதனை செய்தனர்.
இதன்போது பிளாஸ்ரிக் போத்தலில் கிறீஸ் நிரப்பப்பட்டு அதற்குள் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்துப்பாக்கி ஜப்பான் நாட்டு தயாரிப்பு என படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் சிறிது பதற்றநிலை ஏற்பட்டது. மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.