முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம்.
இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இந்த குழுவுக்கான முழுமையான ஆதரவை, கரைதுறைப்பற்று பிரதேச சபை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவுக்கும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றம் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு, (03) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் , தற்போது நாட்டில் இருக்கின்ற அவசர கால நிலமையில், முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடத்துவதற்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கின்றன.
அது தொடர்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர் படை அதிகாரிகளுடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
அதன் முடிவைப் பெற்று நிகழ்வினை நடத்துவதற்கான சகல ஏற்படுகளையும் மேற்கொண்டு நிகழ்வினை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.