இலங்கைக்கு வாருங்கள்! சி.வி. அழைப்பு

இலங்கைக்கு வாருங்கள்! சி.வி. அழைப்பு

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.ஸ்டாலினுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலினுக்கு, சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளைமேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கைகொண்டுள்ளேன்.

இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமதுமக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் மற்றும் கசப்புணர்வும் இருந்துவருவதை நீங்கள் அறிவீர்கள்.

இவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் எமது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன்.

அத்துடன் எமதுமக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கைதமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கைவிடுக்கின்றேன்.

இதற்கான ஏற்பாடுகளைமேற்கொள்வதற்குநான் தயாராக இருக்கின்றேன்.” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 3176 Mukadu · All rights reserved · designed by Speed IT net