அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்!

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்!

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடுத்தபடியாக இப்போது இலங்கையில் அதிகம் பரபரப்பாக பேசப்படுவது, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு பற்றிய கதைகள் தான்.

அமெரிக்கா – இலங்கை இடையே செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இரண்டு நாடுகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் சவாலானதாக உள்ளன.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, திருகோணமலையில் அமெரிக்கா தளம் அமைப்போகின்றது என்றும், இலங்கையில் கால் வைக்கப் போகிறது என்றும், மஹிந்த அணியில் இடம்பெற்றிருக்கின்ற திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் கூறிவந்தனர்.

ஆனால், அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று மறுக்கப்பட்டு வந்திருக்கின்ற போதும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற வேகமான நெருக்கம், எதுவும் நடக்கலாம் என்றொரு கருத்தையே பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு, முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும் இலங்கையில் தளம் ஒன்றை அமைக்கின்ற அளவுக்கு அமெரிக்கா செல்லவில்லை என்பதே உண்மை.

இலங்கையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் வரும் என்பதையும், இந்தியாவும் விரும்பாது என்பதையும், அமெரிக்காவும் அறியும், இலங்கை அரசாங்கமும் அறியும்.

எப்போதும் தனது காலடியில் இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்தியாவுக்கு, அமெரிக்க தளம் ஒன்று இலங்கையில் அமைவது அச்சுறுத்தலானதாகவே இருக்கும்.

இப்போதைய சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு நாடுகளாக இருக்கலாம். அதுவே நிலையானது நிரந்தரமானது என்று கூற முடியாது. எனவே அமெரிக்காவோ வேறு எந்த நாடோ இலங்கைத் தீவில் தளம் அமைத்து நிலை கொள்வதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது, அனுமதிக்காது.

இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க முனையும் போதும் இந்தியப் பெருங்கடலில் தனக்கு அருகேயுள்ள பகுதியில் பதற்ற நிலை, தீவிரமடையும் என்பதை இந்தியா அறியும்.

அப்படியானதொரு நிலையானது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே பிராந்திய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டும் இலங்கையில் தளம் ஒன்றை அமைத்து அதனைச் சீண்டுவதற்கு அமெரிக்கா முற்படாது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸும் வேறு பல தூதரக அதிகாரிகளும், இலங்கையில் தளம் அமைக்கும் திட்டம் ஏதும் அமெரிக்காவுக்கு கிடையாது என்றும், அதற்கான திட்டங்கள் எதையும் முன்வைக்கவில்லை என்றும் திரும்பத் திரும்ப மறுத்தாலும், அந்த வதந்தி இன்னமும் மாறி மாறி சுற்றிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் அமெரிக்காவின் தளம் அமைவதற்கான சூழலும், வாய்ப்பும் இல்லை என்பது, திஸ்ஸ விதாரண போன்ற மஹிந்த விசுவாசிகளுக்கு நன்றாகவே தெரிந்தாலும், சிங்கள மக்களை உசுப்பேற்றுவதற்கு, அவர்கள் மத்தியில் தற்போதைய அரசுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கும் இது போன்ற வதந்திகள் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன.

இந்த வதந்திகளை முறியடித்துக் கொண்டே இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் அமெரிக்காவும் இலங்கையும் சவால்களை எதிர்கொள்கின்றன.

இலங்கையுடன் சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்தல் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என்ற கதை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே அரசியல் வட்டாரங்களில் உலாவி வந்தது.

1995ஆம் ஆண்டு சந்திக்கா குமாரதுங்க அரசாங்கத்துடனும், அதற்குப் பின்னர், 1997ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடனும், அமெரிக்கா செய்து கொண்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு காலாவதியாகிய நிலையில் அதனைப் புதுப்பிக்க அமெரிக்கா முற்பட்டதில் இருந்தே இந்த கதைகள் உலாவத் தொடங்கி விட்டன.

மஹிந்த அணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, ஜேவிபியின் பிமல் ரத்நாயக்க போன்றவர்கள் தான் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு உடன்பாட்டு முன்மொழிவு தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.

அப்போது இலங்கையும் சரி அமெரிக்காவும் சரி புதிய பாதுகாப்பு உடன்பாடு எதுவும் முன்மொழியவில்லை என்றே கூறி வந்தன. அமெரிக்கா புதிதாக எந்த உடன்பாட்டு முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை என்று இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் கூறியிருந்த நிலையில் இப்போது புதிய உடன்பாடு குறித்து பேசப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையும் அமெரிக்காவும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டை புதுப்பித்துக் கொண்டிருந்தன.

அதில் மேலும் திருத்தங்கள் செய்யவுள்ளதாகவும், காலமாற்றத்துக்கு ஏற்ப புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கடந்த வாரம் கூறியிருந்தார்.

சோபா உடன்பாட்டினால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வராது என்றும் அவர் கண்டியில் திட்டவட்டமாக கூறியிருந்ததன் மூலம் சோபா உடன்பாட்டை இலங்கையுடன் செய்து கொள்ளும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டு வரைவின் சில உள்ளடக்கங்கள் பெரும் சந்தேகங்களையும் பீதியையும் சிங்கள அரசியில் மட்டங்களில் ஏற்படுத்தியிருக்கின்றன.

இலங்கைக்கு வரும் அமெரிக்க படையினர் தவறுகளை இழைத்தால் இலங்கையின் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்களிக்கும் ஒரு விதிமுறையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விலக்கு உரிமை ஆபத்தானது, இலங்கையின் இறைமையை மீறுகின்ற விடயம் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்தியிருந்தன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதுபற்றி நடத்திய பேச்சுகளின் போது அமெரிக்க படையினருக்கு சட்ட விலக்குரிமை அளிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அது மாத்திரமின்றி கோத்தபாய ராஜபக்சவினால் கையெழுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டில் அமெரிக்க படையினருக்கு சட்ட விலக்கு அளிக்கும் பிரிவும் இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாடுகளையும் தனக்குத் தெரியாமல் கையெழுத்திட கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார் என்றும் ஒரு தகவல் உள்ளது.

திலக் மாரப்பன சட்டமா அதிபராக இருந்தவர். சட்ட நிபுணர்களில் ஒருவர். பாதுகாப்பு அமைச்சராகவும் நாட்டின் தலைவராகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் போது அவருக்கு தெரியாமல் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அவ்வாறான உடன்பாடு வலுவற்றது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதுபோலவே நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதிக்கு தெரியாமல் இலங்கையுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினால் எந்தப் பயனும் கிடைக்காது என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்.

அப்படியிருக்க இரண்டு நாடுகளும் சோபா உடன்பாட்டில் அவ்வளவு விரைவாக கையெழுத்திடும் நிலை உருவாகும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

அதேவேளை அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கொழும்பில் தனக்குச் சாதகமான ஒரு அரசாங்கம் இருக்கும் போதே தமக்குத் தேவையான உடன்பாடுகளை செய்து கொண்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

சோபா உடன்பாட்டை நோக்கி அமெரிக்கா நகர்த்தும் காய்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மிகவலுவான நிலையில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே தற்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான உச்சபட்ச முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கையின் வரலாற்றில் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய உறவுகளும் ஒத்துழைப்புகளும் நிலவிய காலப்பகுதியாக 2015 – 2019ஐ சந்தேகமின்றிக் குறிப்பிடலாம்.

பாதுகாப்பு ரீதியாக இரண்டு நாடுகளும் இந்தக் காலப்பகுதியில் தான் மிக நெருக்கமான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை மேலும் விரைவாக்கிக் கொள்வதற்கும் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும் சோபா உடன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா முற்படுகிறது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் இந்த வாரம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணமும் இதனை அடிப்படையாகக் கொண்டது தான்.

இவர் இலங்கையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் கலந்துரையாடவுள்ள முக்கியமான விடயங்களில் பிராந்திய பாதுகாப்பு, அமைதிகாப்பு, கண்ணிவெடிகள், வெடிபொருட்களை அகற்றல், தீவிரவாத முறியடிப்பு மற்றும் ஏனைய பரஸ்பர நலன்கள் கொண்ட விவகாரங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை உச்சநிலைக்கு கொண்டு செல்ல விரும்பும் அமெரிக்காவுக்கு சிங்கள – பௌத்த தீவிரவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் உள்ள இடதுசாரிகளும் தான் சவாலாக இருக்கின்றார்கள்.

அவர்கள் எப்போதும் அமெரிக்காவைச் சந்தேகத்துடன் பார்க்கின்ற நிலை காணப்படுவதுடன் அமெரிக்காவை வைத்து அரசியல் நடத்தியும் வருகின்றனர்.

இவர்களைச் சமாளித்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வது அமெரிக்காவுக்கு ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இருக்கும் போலத் தெரியவில்லை.

எழுத்தாளர் Subathra

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net