கருணாவால் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்!

கருணாவால் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்!

மட்டக்களப்பிலுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் தன்னால் வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினை தொடர்ந்தே அதன் பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி – உங்களுடைய ஆட்சிக்காலத்தில் தான் சர்சைக்குரிய பல்கலைக்கழகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் இது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை?

பதில் – ஆரம்பத்தில் இந்த பல்கலைக்கழகம் கிங் அப்துல்லா கெம்பஸ் என்று தான் நிர்மாணிக்கப்படவிருந்தது. இதனை நான் எதிர்த்தேன். மஹிந்த ராஜபக்சவிடத்தில் இதனை அனுமதிக்க கூடாது என்றும் கூறினேன்.

எனக்கு ஆதரவாக மறைந்த அஸ்வர் எம்.பியும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே குறித்த பல்கலைக்கழத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எனினும் நான் தொடர்ந்தும் எதிர்த்து வந்தேன். இருப்பினும், வாரைப் பிரதேசசபையூடாக பாரியளவில் காணிகள் வழங்கப்பட்டன.

தொழிற்பயிற்சி அமைச்சும் இந்த விடயத்தில் தவறுகளை இழைத்துவிட்டது. இருப்பினும் அப்போது அமைச்சராக இருந்த டளஸ் மக்களுக்கு நன்மையளிக்கும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதாகவே கூறுகிறார்.

இவற்றை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். குறித்த பல்கலைக்கழகத்தின் கட்டட அமைப்பு அரேபிய கட்டடக்கலையை ஒத்ததாகவே உள்ளது.

அதுவே தவறானதாகும். ஆகவே இதனை முழுமையாக அரசுடமையாக்கி கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net